
சென்னையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் ஏற்கனவே 60 திருட்டுச் சிலைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது அவரது பண்ணை வீட்டில் 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிலை கடத்தல் வழக்கில் தீனதயாளன் என்பவரை போலீசார் கடந்த சில வருடங்களுக்கு முன் கைது செய்தனர். விசாரணையில் அவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரிடம் சிலைகளை விற்றதாகக் கூறியிருந்தார். இதுதொடர்பாக அவரது வீட்டில் ஏற்கனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர் ஷா வீட்டில் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். அதில் 60 சிலைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவை அனைத்தும் திருட்டு சிலைகள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் 100 வருடத்துக்கு மேல் பழமையா னவை என்றும் இந்த சிலைகள் பல்வேறு கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்றும் ஐஜி, பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், மேல்மருவத்தூர் அருகே ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் இன்று ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் மேலும் 80 சிலைகள், கோயில்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.