17 தொகுதிகளில் நூலிழையில் தோல்வி.. தவெகவுக்கு நழுவிய பெரும்பான்மை.! விவரம்
தமிழ்நாடு அரசியல் 1967க்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கிடையே சுழன்றுவந்த நிலையில், முதன்முறையாக இந்த இரு கட்சிகளுக்கும் இடமளிக்காமல் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
108 தொகுதிகளை அக்கட்சி வென்றிருந்தாலும் ஆட்சியமைக்க 10 இடங்கள் குறைவாகவே உள்ளன. அதேசமயம், அக்கட்சி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, குளித்தலை, பழனி, கோவில்பட்டி, உதகமண்டலம் ஆகிய ஆறு தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தவெக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
திண்டுக்கல், கரூர், பாபநாசம், கிள்ளியூர், புதுக்கோட்டை, திருமயம் ஆகிய ஆறு தொகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு வேறு கட்சிகளுக்குச் சென்றுள்ளது. திருவண்ணாமலை, ஏற்காடு, விருத்தாசலம், கோவை தெற்கு, கீழ்வேளூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் தவெக 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. ஒருவேளை, இந்த 17 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தால் தனிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கக்கூடும்.

