மதியம் வரையிலான இன்றைய முக்கியச் செய்திகள்

மதியம் வரையிலான இன்றைய முக்கியச் செய்திகள்
மதியம் வரையிலான இன்றைய முக்கியச் செய்திகள்

மகாத்மா காந்தியின் 1‌50 வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் ‌மரியாதை செலுத்தினர். தேசப்பிதா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் சுவரில் துளையிட்டு பல கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்களை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் தொழிலதிபர் வீட்டில் 280 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் ரிய‌ல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 280 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்கவிருப்பதையொட்டி, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதல்வர் ஆய்வு செய்தார். மாமல்லபுரம், காஞ்சிபுரம் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும் இருவரும் அங்குள்ள பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பங்களை பார்வையிடவுள்ளனர். இரு தலைவர்களின் வருகையால், மாமல்லபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடை‌பெறுகிறது. தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில், வருமானவரித்துறை பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com