நாளை தேர்தல் முடிவுகள்: தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் - ஓர் பார்வை

நாளை தேர்தல் முடிவுகள்: தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் - ஓர் பார்வை
நாளை தேர்தல் முடிவுகள்: தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் - ஓர் பார்வை

நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள சூழலில், அரசியல் கட்சிகள் என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டன என்பதை பார்க்கலாம்.

சட்டப்பேரவை தேர்தலில் கதாநாயகனாக இருப்பவை கட்சிகள் வெளியிடக்கூடிய தேர்தல் அறிக்கைகள். வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்கின்றன அரசியல் கட்சிகள். இந்தமுறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக, திமுக, மநீம, அமமுக ஆகிய கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை தங்களின் தேர்தல் அறிக்கைகளில் வெளியிட்டுள்ளன.

அதிமுக:

அதன்படி அதிமுக அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு. ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. விலையில்லா வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. வீட்டில் ஒருவருக்கு அரசு பணி என்ற வாக்குறுதியும் பரவலாக கவனம் பெற்றது. நகரப் பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவிகித கட்டண சலுகை, பால் விலை குறைப்பு, விவசாயக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி ஆகியவையும் அதிமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள்.

திமுக:

திமுக ஆட்சி அமைந்த உடன், ஜூன் 3ஆம் தேதி அதாவது கருணாநிதி பிறந்தநாளில் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. அதேபோல குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்தித்தது. இவை தவிர பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற வாக்குறுதிகளும் கவனம் பெற்றன. நகை மற்றுக் கல்விக் கடன்கள் தள்ளுபடி, மீண்டும் சட்ட மேலவை அமைக்கப்படும், தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்படும் என்றும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம்:

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வீட்டு வேலை மட்டும் செய்யும் இல்லத்தரசிகளுக்கு மதிப்பு உரிமைத் தொகையாக 3000 ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது. நீட்டுக்கு பதிலாக மாநில அரசின் பாடத்திட்டத்தில் சீட் தேர்வு நடத்தப்படும் என மநீம கூறியுள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மநீம கூறி இருக்கிறது. நியாயமான விலையில் பல்வேறு பொருட்களும் கிடைக்கும் வகையில் ராணுவ கேண்டீன் போல மக்கள் கேண்டீன் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறது. மாவட்டம்தோறும் மகளிர் வங்கிகள் உருவாக்கப்படும் என்றும் 10 ஆண்டுகளில் 1 டிரில்லியன் பொருளாதாரம் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமமுக:

அமமுகவை பொறுத்தவரை அம்மா பொருளாதார புரட்சித் திட்டம் என்ற பெயரில் கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குதல் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் என கூறப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்; சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்; 45 வயது வரையிலான ஆண்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளும் அமமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அதுதவிர 60 நாட்களில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சி:

போட்டிக்களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடாமலே தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com