மாங்காடு நகராட்சி: குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை அருகே மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட ஜனனி நகர், ஸ்ரீ்நிவாசா நகர், ஸ்ரீ சக்ரா நகர், பத்மாவதி நகர், அப்பாவு நகர், வீர ஆஞ்சநேய தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 அடிக்குமேல் குடியிருப்பை சூழ்ந்துள்ள மழை வெள்ள பாதிப்பால், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கு பருவ மழையின் பாதிப்பு சற்றே குறைந்து வந்த நிலையில், முந்தைய மழையின் நீர் வடிவதற்கு முன்பாகவே மீண்டும் மழை வந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது மாங்காடு நகராட்சி. இப்பகுதியில் கழிவு நீருடன் மழை,வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டில் நுழைவதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
தேங்கி நிற்கும் மழை வெள்ளம் வெளியேற போதிய கால்வாய் வசதிகள் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழையின் போது ராட்சத மோட்டார்கள் கொண்டு நீரை வெளியேற்றும் நகராட்சி அதிகாரிகள், இதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.