ஊரடங்கில் அமோகமாக காய்ச்சப்பட்ட சாராயம்: 500 பேர் கைது !
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 12 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதும் மட்டுமல்லாமல் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இப்போது வரை 27 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் பலவித கிராமங்களில் இருப்பதை கண்டறிந்து அதனை கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் விற்பனைக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழித்துள்ளனர். மேலும் 175 லிட்டர்கள் கள், 3 ஆயிரம் பல்வேறு கொள்ளளவு கொண்ட மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு மூலப்பொருளான வெல்லம் கடுக்காய் முதலிய பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 100 இருசக்கர வாகனங்கள் 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது 551 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 496 குற்றவாளிகள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என்று திருவண்ணாமலை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.