சட்ட விரோதமாக மது விற்பனை: காவல்துறையினர் உதவி; பொதுமக்கள் புகார்!
கடலூர் மாவட்டம் நந்திமங்கலத்தில் காவல்துறையினரின் உதவியுடன் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சில பகுதிகளில் சந்துக்கடைகள், வீடுகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று கடலூர் மாவட்டம் நந்திமங்கலத்தில் காவல்துறையினரின் உதவியுடன் பெட்டிக்கடையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுபோல் கத்தாழை, மும்முடி சோழகன் உள்ளிட்ட கிராமங்களில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.