உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு? விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு நோயாளிகளுக்கு முறைகேடாக முன்னுரிமை அளிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளா அறிக்கையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நம் நாட்டு நோயாளிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் போது வெளிநாட்டு நோயாளிகளிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதற்காக விதிமுறைகளை மீறி உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாது என கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகேடுகள் குறித்து மத்திய அரசு நடத்திய உயர்நிலை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாக வைகோ கூறியுள்ளார்.
இதையே காரணமாகக் கூறி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது சுகாதாரத்துறையை மத்திய அரசின் அதிகார பட்டியலில் சேர்க்கவும் முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது என கூறியுள்ளார். சுகாதாரத்துறையை மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிடக்கூடாது என கூறியுள்ள வைகோ, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

