நாமக்கல் : பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனை - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்

நாமக்கல் : பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனை - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்
நாமக்கல் : பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனை - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்

நாமக்கல்லில் பயோ டீசல் என்ற பெயரில் நடைபெறும் சட்ட விரோத டீசல் விற்பனை புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலம் ஆகியுள்ளது. சட்ட விரோத கலப்பட டீசல் விற்பனை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது.

மோட்டார் வாகன போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது டீசல். கடந்த ஓராண்டுக்கு மேலாக டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு இருபது ரூபாய்க்கு மேல் உயர்ந்து இன்று 93 ரூபாய்க்கு நாமக்கல்லில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உள்ள பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் லாரிகளுக்கு போதிய பராமரிப்பில்லாமல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்து லாரி தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட சிலர் வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையிலிருந்து பயோ டீசல் என்ற பெயரில் எவ்வித அனுமதியும் இல்லாமல் நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக கலப்பட டீசலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை குறைத்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக நாமக்கல், வள்ளிபுரம், காவெட்டிபட்டி, புலவர்பாளையம் புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும், ஒரு சில இடங்களில் மறைவான பகுதிகளில் பகல் நேரங்களிலும் லாரிகளில் கலப்பட டீசலை கொண்டு வந்து குறைவான விலைக்கு விற்கப்படுவது காண முடிந்தது.

இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, “ தற்போது டீசல் விலை 93 ரூபாய் அளவிற்கு விற்கும்போது லாரி ஒன்றுக்கு 300 முதல் 400 லிட்டர் டீசல் நிரப்பும்  நிலையில், இந்த டீசலை நிரப்பும் போது 1,500 முதல் 2,000 ரூபாய் வரை மீதமாகும். மாதமொன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை இதன் மூலம் சேமிக்கப்படுகிறது. அதனால் இம்மாதிரியான டீசலை லாரி உரிமையாளர்கள் நாடி செல்கின்றனர். அதில் என்ன கலக்கப்படுகிறது, எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது . இருந்த போதிலும் தங்களுக்கு தற்போது செலவு குறைவாக இருப்பதால் இதனை பயன்படுத்துகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்.

இந்த சட்ட விரோத டீசலை விற்பனையை அதிகாரிகள் கண்காணித்து இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் வாகனங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரியாமல் லாரி உரிமையாளர்கள் பயன்படுத்துவதாகும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com