சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு கருக்கலைப்பு - பெற்றோர் கைது
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவரது மனைவி செல்வி (37). இவர்களது 19 வயது மகள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் மணமகளின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான்கு மாதங்களுக்கு முன் பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் காதல் கணவருடன் பெண் சென்றார்.
இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி தனது காதல் கணவருக்கு தெரியாமல் பெற்றோரை பார்க்க வந்த இளம் பெண்ணை தங்களுடன் இருக்கவேண்டும் என சுப்பிரமணி மற்றும் செல்வி கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் பேச்சைக் கேட்டு பெற்றோர் வீட்டில் இளம்பெண் தங்கியுள்ளார். அப்போது தனது மகள் கர்ப்பமாக இருப்பது பெற்றோர்களுக்கு தெரியவந்ததையடுத்து ஆத்தூரில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் மகளின் கருவை கலைத்துள்ளனர்.
இதுகுறித்து காதல் கணவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் மகளிர் காவல் நிலைய போலீசார் சுப்ரமணியம் மற்றும் செல்வி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் இருவேறு சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது