பூச்சிக்கொல்லிகளை தெளிக்க 'அக்ரிஹாப்டர்': சென்னை ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு!
பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் 'ஸ்மார்ட் அக்ரிஹாப்டர்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்
சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஒரு ஸ்மார்ட் அக்ரிஹாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளனர். ட்ரோன் வடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த அக்ரிஹாப்டர், விவசாய நிலங்களுக்கு பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை பிரதானமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பயிர்களின் ஆரோக்கியத்தை துல்லியமாக படமெடுத்து தெரிந்துகொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
ரசாயனங்கள் அடங்கிய பூச்சிக்கொல்லிகளை மனிதர்கள் தெளிப்பதால் அவர்களுக்கு நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது என்றும், இயந்திரம் மூலம் தெளிப்பதே விவசாயிகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளி பொறியியல் மாணவர் கவி கைலாஷ், ஸ்மார்ட் அக்ரிஹாப்டர் 15 லிட்டர் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் தெளிப்பதைக் காட்டிலும் 10 மடங்கு வேகத்தில் இது பூச்சிக்கொல்லியை தெளிக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த மற்றொரு மாணவர் ரிஷாப் வெர்மா, விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. அப்படிப்பட்ட விவசாயத்தை மேம்படுத்த ஒரு தீவிர தேவை உள்ளது என தெரிவித்துள்ளார். இதன் விலை தோராயமாக ரூ.5.1 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.