“இந்தியாவில் ஒரு மைக்ரோசாஃப்டோ ஆப்பிளோ ஏன் உருவாக முடியாது?” ஐஐடி விருதுக்குப் பின் ARR பேச்சு
சென்னை ஐஐடியின் XTIC எனும் ஆராய்ச்சி மையத்தில் வருடத்திற்கான விருது இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஏஆர் ரஹ்மான் இயக்கத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட லீ மஸ்க் திரைப்பட்டத்திற்கு அனுபவம் மிக்க கண்டுப்பிடிப்பு விருதை சென்னை ஐஐடி வழங்கியது.
சென்னை ஐஐடி பேராசிரியர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு இந்த வருடத்திற்கான சென்னை ஐஐடியின் அனுபவமிக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தின் விருதை வழங்கினர். அதன்பின்னர் 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஆறு வருடமாக பலவிதமான தொழில்நுட்ப சிக்கலுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட லீ மஸ்க் மெய் நிகர் தொழில்நுட்ப திரைப்படம் குறித்து உரையாடினார் அவர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ ஆர் ரஹ்மான், "உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மெய் நிகர் தொழில் நுட்பத்தால் 37 நிமிட படம் பார்த்தவர்கள் 10 நிமிடம் படமா என கேட்டனர். புதிய தொழில்நுடபம் என்பதால் அனைவரும் ரசித்தனர்.
ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வர கூடாது? நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும். இந்தியாவில் VR மூலமாக கோவில்களை சுற்றி பார்க்கலாம். கல்யாண நிகழ்ச்சியை உணர்வுப்பூர்வமாக ரசிக்கலாம். என்ன... அளவுக்கு அதிகமாக தலை வலிக்கும்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். கற்பனைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இசை மூலம் மனித சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது” என தெரிவித்தார்.