உடும்பு வேட்டை: திருச்சிக்கு கடத்த முயன்ற 29 உடும்புகள் உயிருடன் மீட்பு - இருவர் கைது
அறந்தாங்கி பகுதியில் வேட்டையாடப்பட்டு திருச்சிக்கு கடத்த முயன்ற 29 உடும்புகளை தனிப்படை போலீசார் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் நரிக்குறவர் காலனியை சேர்ந்த ரஜினி மற்றும் மாதவன் ஆகிய இருவரும் அறந்தாங்கி பகுதியில் 29 உடும்புகளை வேட்டையாடி திருச்சிக்கு கடத்த முயன்றனர். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 29 உடும்புகள் உயிருடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து; அவர்கள் வைத்திருந்த இரண்டு பைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து இருவரையும் தனிப்படை போலீசார் வனத்துறை ரேஞ்சர் மேகலா மற்றும் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் உடும்பு ஒன்று 500 ரூபாய் வரை திருச்சியில் விற்கப்படும் என்று பிடிபட்டவர்கள் தெரிவித்தனர்.

