நீதிபதிகள் விமர்சனம் பற்றி கவலைப்பட கூடாது : இந்திரா பானர்ஜி
நீதிபதிகளை விமர்சிப்பதை பற்றி கவலைப்படாமல் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் உட்பட்டு தீர்ப்புகளை வழங்கிட வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியுள்ளார்.
நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஆகியன அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் தொடக்க விழா நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திருமதி இந்திரா பானார்ஜி, நீதிபதிகள் வேலுமணி, தாரணி , மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
விழாவில் பேசிய தலைமை நீதிபதி திருமதி இந்திரா பானர்ஜி நாட்டில் விவாகாரத்தும், முறையற்ற திருமணங்களும் அதிகரித்து வருவதாகவும் இதனால் குடும்ப நல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவதால், அந்த குடும்பங்களின் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த நிலை மாற வேண்டும் என்றும் குடும்ப நல நீதிமன்றங்களில் தாமதமான தீர்ப்பானது ஏழை பெண்களையும், ஏழை குழந்தைகளையும் பாதிக்கும் என்பதால் வழக்கறிஞர்கள் திருமண உறவுகளை பாதுக்காக்கும் வகையில் அவர்களுக்கு ஆலோசராக இருக்க வேண்டும் எனகேட்டுக்கொண்டார். நீதித்துறையில் கண்ணியம் காக்கப்பட வேண்டும், நீதிபதிகளை சிலர் வியாபார நோக்கத்திற்காக விமர்சிப்பதாகவும் அதை பற்றி கவலைப்படாமல் சட்டப்படி , நியாயப்படி செயல்பட்டு தீர்ப்புகளை வழங்கிட வேண்டும் என பேசினார்.