”நியமனம் பற்றிகேட்டால் நீங்களே அமைத்து கொள்ளுங்கள் என்பதா?”-ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன்

”நியமனம் பற்றிகேட்டால் நீங்களே அமைத்து கொள்ளுங்கள் என்பதா?”-ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன்
”நியமனம் பற்றிகேட்டால் நீங்களே அமைத்து கொள்ளுங்கள் என்பதா?”-ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன்

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் காலதாமதமாவது குறித்து கேட்டால் நீங்களே நீதிபதிகளை நியமனம் செய்து கொள்ளுங்கள் என சட்ட அமைச்சர் பேசுவது சட்ட விதிகளுக்கு முரணானது என்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று 18.12.22 நடைபெற்றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு சட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது நீதிபதிகள் நியமனம் குறித்து அவர் பேசுகையில், நீதிபதிகள் நியமனம் குறித்து கொலிஜியம் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். 140 பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்தும், இதுவரை நீதிபதிகள் நியமன உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. தாமதமாவது குறித்து கேட்டால் மத்திய சட்ட அமைச்சர் நீங்களே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளுங்கள் என்கிறார். மத்திய சட்ட அமைச்சர் பேசுவது சட்டவிதிகளுக்கு முரணானது என்று கூறினார்.

மேலும் பள்ளிக்குச் செல்லாமல், கல்லூரிக்கு செல்லாமல், எந்த தகுதியும் இல்லாமல் பணம் கொடுத்து வழக்கறிஞர் என்ற பட்டத்தை வாங்கிக் கொண்டு போலி வழக்கறிஞர்கள் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு அதிக அளவில் பிரச்சனைகள் உருவாகிறது. அதேபோல் தமிழகத்தில் அதிக போலி சட்டக் கல்லூரி உள்ளது. பொதுவாகவே தமிழகத்தில் அதிக அளவில் சட்டக் கல்லூரிகள் உள்ளன. அதேபோல் நீதிமன்றத்திற்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. வழக்குகள் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம்.

ஆகையால் தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளை குறைக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வழக்கறிஞராக பணியாற்றக் கூடாது. அவ்வாறு ஓய்வு பெற்ற நீதிபதி வழக்கறிஞராக பணியாற்றினால் வழக்கறிஞரின் தொழிலை கெடுத்து விடுவார். போலி சட்டக் கல்லூரிகள் மீது பார் கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது தொடர்பாக அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com