தமிழ்ப் புத்தாண்டை மாற்ற திட்டமிருந்தால் திமுக அரசு கைவிடவேண்டும்: டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்ப் புத்தாண்டை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு மாற்ற ஏதேனும் திட்டமிருந்தால் திமுக அரசு அதனைக் கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்ப் புத்தாண்டு என்பதை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு தி.மு.க அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டமிருந்தால் அதனைக் கைவிட வேண்டும். கருணாநிதி செய்த இதே போன்ற தவறை, ஜெயலலிதா திருத்தி, மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடுகிறபடி சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக்கினார்கள்.
நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை, இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்தது உள்ளிட்ட தி.மு.க அரசின் தோல்விகளை திசை திருப்பவே இதுபோன்ற தேவையில்லாத வேலைகளைச் செய்யத் துடிக்கிறார்கள்.
உண்மையாகவே தமிழை வளர்ப்பதற்கு செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், எப்போதும் போல விளம்பர விளையாட்டிலேயே ஈடுபட்டு தமிழக மக்களை ஏமாற்ற நினைப்பதை தி.மு.க அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.