ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம்: சுப்பிரமணியன் சுவாமி
எதிர்ப்பை மீறி ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை, யாழ்ப்பாணத்தில் லைகா நிறுவனம் கட்டியுள்ள சுமார் 150 வீடுகளை தமிழர்களுக்கு வழங்கும் விழா ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், லைகா தயாரிக்கும் ’2.ஓ’ படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, ரஜினிகாந்த் இலங்கை பயணத்தை தவிர்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டார். மேலும் இலங்கையில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வரக் கூடாது என இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், எதிர்ப்பை மீறி ரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாராட்டலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.