Annamalai
Annamalaipt web

“வடக்கு தெற்கு பிரச்னையை மீண்டும் திமுக கொண்டு வந்தால்..” அண்ணாமலை எச்சரிக்கை

மோடி பிரதமராக பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை தற்போது 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதனின் மருமகனும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்தவருமான த.சி.க.கண்ணனின் உருவப்படத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதில், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இடைக்கால பட்ஜெட் 2024-2025
இடைக்கால பட்ஜெட் 2024-2025puthiya thalaimurai

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியபோது...

மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு மோடி பிரதமராக பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்தது. தற்போது பிரதமர் அதை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார். மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 30.5 ஆக இருந்தது. அப்போது அதை அதிகரிக்க வேண்டும் என மோடி கோரிக்கை வைத்தார்.

1960-ல் பல நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை தீர்மானித்தபோது மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை தீர்மானித்தனர். எஞ்சிய 40 சதவீத நிதியை பிற வகையில் கணக்கிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதிப் பகிர்வாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, அந்த மாநிலத்திற்கான நிதிப் பகிர்வில் 15 சதவீதம் அளவிற்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது,

L.Murugan
L.Muruganfile

மேலும் மாநிலத்தின் மக்களிடையே உள்ள வருவாய் வித்தியாசம் (ஏழைகள், பணக்காரர்கள் இடையே உள்ள பொருளாதார வித்தியாசம்) 40 சதவீதம் அளவு கணக்கிடப்படுகிறது. ஜிஎஸ்டி வசூலில் 50 ரூபாய் மாநிலத்திற்கு நேரடியாகவும், 21 ரூபாய் மறைமுகமாக மானியங்களாகவும் மொத்தம் 71 ரூபாய் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்படுகிறது.

இந்தியா டுடே பத்திரிகை கடந்த ஆண்டு ஸ்டாலினை இந்தியாவில் most popular cm என்று கூறியபோது திமுகவினர் அதை பெருமையாக பேசினர். ஆனால் இப்போது வந்துள்ள சர்வே முடிவு பற்றி அவர்கள் எதுவுமே பேசுவதில்லை. இதுபோன்ற காரணத்தால்தான் திமுகவினர் வடக்கு - தெற்கு பிரச்னையை மீண்டும் எடுத்து வருகிறார்கள். வடக்கு தெற்கு பிரச்னை என்பது பிய்ந்துபோன செருப்பு போன்றது, அதை மீண்டும் கொண்டு வந்தால் அதன் விளைவை திமுகவினர்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

cm stalin
cm stalinpt desk

எல்.முருகன் குறித்து டிஆர் பாலு பேசியதை நாங்கள் சாதி ரீதியாக கொண்டு செல்லவில்லை, ஆனால், மூத்த அமைச்சரான எல்.முருகன் குறித்து டி.ஆர். பாலு பேசியபோது எல்.முருகன் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார், அவரது உடல் மொழி, பேசிய பேச்சை மக்களும் பார்த்துள்ளனர். எனவே அதை வேறு எந்த கோணத்தில் எடுத்துக் கொள்ள முடியும்? இதில் சமூக நீதி இல்லையே. ஏற்கெனவே ஒருமுறை நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா என்ற வார்த்தையை டிஆர்.பாலு பயன்படுத்தினார்.

நான்கரை ஆண்டு காலம் பாஜக தயவில்தான் அதிமுக ஆட்சி இருந்தது என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்து குறித்து நான் கருத்து கூற முடியாது. இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்னையில் நாங்கள் குளிர்காய மாட்டோம். 2017 - 21 காலகட்டத்தில் அதிமுக எப்படி இருந்தது என்பது பாஜகவிற்குத் தெரியாது, ஆனால், அந்த கட்சிக்குள்ளே இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அது தெரிந்திருக்கலாம். ஆனால் பிரதமர் மீது தொடர்ந்து மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ், அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

OPS
OPSpt desk

சென்னைக்குள் நடைபயணத்திற்கு அனுமதி வழங்காததால் காவல்துறை மீது எந்த கோபமும் இல்லை. சென்னைக்குள் போக்குவரத்து முக்கியத்துவம் உள்ள சாலைகளில் இல்லாமல் மற்ற சாலைகளில் யாத்திரைக்கு அனுமதி தந்தால் போதும் என்றுதான் கேட்டோம். எங்கள் யாத்திரையில் இதுவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. மிக கவனமாக யாத்திரையை மேற்கொண்டு வருகிறோம். யாத்திரையில் தனியாக குழு அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறோம். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com