''நான் அண்ணாகிட்ட போகிறேன்' '- மதுரையில் கவனத்தை ஈர்த்த திமுக போஸ்டர்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1969ஆம் ஆண்டு திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற அவர், 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்தார். அறிஞர் அண்ணா மீது அளவற்ற அன்பு கொண்ட கருணாநிதி, அண்ணா வழியில் கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வந்தார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
இந்நிலையில் அவரது மூன்றாமாண்டு நினைவு தினம் வரும் 7-ஆம் தேதி வர உள்ளதையொட்டி திமுகவினர் பல்வேறு விதமான சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் திமுக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த சுவரொட்டியில் மறைந்த முதல்வர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினிடம் பேசுவதுபோல சித்திரித்து ஒட்டப்பட்டுள்ளது.
அதில், “தம்பி ஸ்டாலின்... உடன் பிறப்புகள் யாராவது வந்து கேட்டால் நான் அண்ணாகிட்ட போகிறேன் என்று சொல்லிவிடு" என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் அண்ணன் தம்பிபோல உடன் பிறப்புகளாய் வாழ்ந்தவர்கள் என்பதால் இந்த போஸ்டர் திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.