
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் மண்டபம் அடுத்த வேதாளை, சீனியப்பா தர்கா மற்றும் மரைக்காயர் பட்டினம் உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி மண்டபம் அடுத்த வேதாளை எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் சேதுராஜன் என்பவர் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கண்காணிப்பில் ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி மற்றும் மண்டபம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் அடங்கிய போலீசார் சேதுராஜன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது வீட்டில் இருந்து 6 பாக்கெட்டுகளில் 6 கிலோ ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நாககுமார் மற்றும் சூடவலைகுச்சு பகுதியை சேர்ந்த அவரது உறவினர் சக்திவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையில் இருந்து ஐஸ் போதைப் பொருளை வாங்கி காரில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், மண்டபம் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேதாளை எம்ஜிஆர் நகரை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் கூடைவலை குச்சு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் ஆகிய இருவரும் ஐஸ் போதைப் பொருளை நாககுமாருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நால்வரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி எனவும், ஐஸ் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நான்கு பேர் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.