சங்கர் மறைந்தாலும்.. மறையாத ஐஏஎஸ் அகாடமி பயணம்...

சங்கர் மறைந்தாலும்.. மறையாத ஐஏஎஸ் அகாடமி பயணம்...
சங்கர் மறைந்தாலும்.. மறையாத ஐஏஎஸ் அகாடமி பயணம்...

எம்.எஸ்.சி வேளாண்மை முடித்த கையோடு ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற கனவை சுமந்தபடி நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு தனது பயணத்தை தொடங்கியவர் சங்கரன். திருச்செங்கோடு அருகேயுள்ள நல்லகவுண்டம்பாளையம் என்ற குக்கிராமத்தில் இருந்து சங்கரன் வந்திருந்தாலும், சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய 2 முறையும் நேர்க்காணல் வரை சென்றவர். 3ஆவது முறை நிச்சயம் வெற்றிப்பெறலாம் என்ற நம்பிக்கையிலிருந்த அவருக்கு வயது வரம்பு தடையாக மாறியது. தன்னுடைய கனவு தகர்ந்த அந்தப் பொழுதில்தான், தம்மைப் போன்ற கனவுடன் வருபவர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,களாக மாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது சங்கரனுக்கு.

அதற்கான விதைதான் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஏஎஸ் அகாடமி. சென்னை அண்ணாநகரில் 34 மாணவர்களோடு தொடங்கப்பட்ட அகாடமி. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறது. இங்கு பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 700 பேர் உட்பட 900க்கும் அதிகமானோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று அரசுப்பணியில் உள்ளனர். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டும் என்றால் டெல்லி செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, வெளிமாநிலத்தவரையும் தரமான பயிற்சிக்காக தமிழகம் வரவழைத்தவர் இந்த சங்கரன்.

அதன் காரணமாகவே, ஜம்மு - காஷ்மீர் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் அதிகாரிகளாக உள்ளனர். 27 நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாரிகளாக உள்ள பலரும் சங்கரனின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள்தான். சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வுகளுக்கும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி வழங்கப்படுகிறது. 

கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமியின் கிளைகள் உள்ளன. ஐ.ஏ.எஸ் கனவோடு உள்ள நூற்றுக்கணக்கான கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு சரியான வழிக்காட்டுதலை ஏற்படுத்தியவர் சங்கரன். இந்திய குடிமைப்பணியில் வளமான ஒரு தலைமுறையை உருவாக்கியவர் என்ற பெயருக்கு சொந்தகாரர், தன் வாழ்க்கையை பாதியிலேயே முடித்துக் கொண்ட சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் அவரது மாணவர்கள். 

இந்நிலையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி குடும்பர் சார்பாக இன்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சங்கரின் புகைப்படத்துடன், “பெருங்கடல் அவர்! அலைகள் நாம்! ஆர்ப்பரித்துத் தொடர்வோம்...!” எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com