மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தான் தற்போது இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளேன், எனவே இனிமேல் யாரும் தடுப்பூசி குறித்த வதந்தியை பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் “ஏற்கனவே ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். மேலும் பல மருத்துவத்துறை அதிகாரிகளும் செலுத்திக்கொண்டனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எடுத்துக்கொண்டார். தற்போது நானும் இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். எனவே இனிமேல் யாரும் தடுப்பூசி குறித்த வதந்தியை பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். முன்னுதாரணமாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே நானே தற்போது இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளேன். பல்வேறு சோதனைகளுக்கு பின்புதான் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது, எனவே அனைவரும் நம்பிக்கையுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்” என கூறினார்

தொடர்ந்து பேசிய அவர் “மத்திய சுகாதாரத்துறை மற்றும் பிரதமர் ஆகியோர் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர், அதன்படி சுகாதாரத்துறையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்களுக்குத்தான் முதலில் கோவாக்சின் செலுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதன்பிறகுதான் அனைவருக்கும் படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும். நான் தற்போது ஒரு மருத்துவராகத்தான் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் சதவீதம் குறைவாக இருப்பதால்தான், அனைவருக்கும் நம்பிக்கையை அளிப்பதற்காக இப்போது தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன்.

எனவே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு தயக்கம் வேண்டாம். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த மொத்தம் 6 இலட்சம் முன்கள பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 42,947 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சிறு தயக்கம் இருந்தது உண்மைதான், தற்போது அதையெல்லாம் தாண்டிவிட்டோம். தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் நான் தற்போது நன்றாகவே உள்ளேன். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்வரை முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com