“நான் கடத்தப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன்” - முகிலன் பரபரப்பு புகார்
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என தான் துன்புறுத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய நிலையில், ஆந்திர மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரை ராயபுத்தில் உள்ள எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது தமக்கு நெஞ்சு வலி என முகிலன் கூறியுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் ஆணையிட்டார். இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், தாம் கடத்தப்பட்டதாகவும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என கூறி தாம் துன்புறுத்தப்பட்டதாகவும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களாலேயே தாம் இதுவரை உயிரோடு உள்ளதாகவும் கூறினார். முன்னதாக சிபிசிஐடி வெளியிட்ட அறிக்கையில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முகிலனை கைது செய்துள்ளதாகவும், காணாமல் போன நாட்களில் தாம் எங்கிருந்தேன் என கூற அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.