துரைமுருகனின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர்.
மேலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அவர்து பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ. 10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகனின் நண்பரும், திமுக பகுதி செயலாளருமான சீனிவாசன் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த சோதனையில் பணமோ ஆவணமோ கைப்பற்றப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.