”முதல்வர்களை தரக்குறைவாக விமர்சித்தால் நான் கேட்பேன்” - ராஜேந்திர பாலாஜி பதிலடி

”முதல்வர்களை தரக்குறைவாக விமர்சித்தால் நான் கேட்பேன்” - ராஜேந்திர பாலாஜி பதிலடி
”முதல்வர்களை தரக்குறைவாக விமர்சித்தால் நான் கேட்பேன்” - ராஜேந்திர பாலாஜி பதிலடி

தங்களிடம் திமுகவினர் மரியாதையாக நடந்து கொண்டால் தாங்களும் மரியாதையாக நடந்துகொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாக கூறினார். மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை க் குறிப்பிட்டு, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவில் கொள்ளையடித்த கட்சி தி.மு.க” என்று குறிப்பிட்டார்.  இதற்கு பதில் அளித்த திமுக எம்.பி ஆ.ராசா 2 ஜி வழக்கு குறித்து கோட்டையில் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வரை அழைப்பது ஏன், நானே வருகிறேன் அது ராசாவானாலும் சரி, ஸ்டாலினாலும் சரி என்று வினவினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரது பொம்மையை எரிக்க முயன்றனர். தகவலறிந்து வந்த போலீசார் தீயை அணைத்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதனிடயே ராஜேந்திர பாலாஜிக்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

இந்தக் கருத்திற்கு தற்போது ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார். அவர் கூறும் போது “ நான் முன் விளைவுகள் பின் விளைவுகள் என அனைத்தையும் பார்த்தவன். முதலமைச்சரை குறை சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை. மக்கள் பிரச்னைகளுக்காக மாவட்டம் முழுவதும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடியவர் முதல்வர். தனது முடியை பற்றி சிந்திக்கக் கூடியவர் ஸ்டாலின். நான் கோமாளி அல்ல. ஸ்டாலின் இந்த தேர்தலுக்குப்பின் ஏமாளியாகப் போகிறார். முதல்வர்களை தரக்குறைவாக விமர்சித்தால் தொண்டர்கள் நாங்கள் கேட்போம். 

தன்னை விளம்பரப்படுத்துவதற்காக ரூபாய் 350 கோடி ரூபாயை ஸ்டாலின் பிராந்த் கிஷோருக்கு கொடுத்துள்ளார். முதல்வரை யார் விமர்சித்தாலும் இதை விட கேவலமான முறையில் நான் பதிலடி கொடுப்பேன். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைச் சந்திக்கவும் தயாராக உள்ளோம். திமுகவிற்கு சகுனம் சரியில்லை. அனைவருக்கும் மரியாதை அளிப்பவன் நான். அவர்கள் தரம் தாழ்ந்து பேசியதால்தான் நானும் பேசினேன். முதல்வர்கள் எங்களை கட்டுப்படுத்தியதால் அமைதியாக இருக்கிறோம். 

தமிழக மக்களுக்கு திமுக எதையும் செய்ததில்லை. அலைக்கற்றை வரிசையில் ஊழல் செய்தவர் ராசா. திகார் ஜெயிலில் குடியிருந்த அவர்  அழுக்கை வைத்துக் கொண்டு எங்களை விமர்சனம் செய்யக்கூடாது. அதே சமயம் அதிமுக கைப்படாத ரோஜா அல்ல. ஒரு சில தவறுகள் நடக்கலாம். அது தலைவரால் தண்டிக்கப்படும். தவறுகள் திருத்திக் கொள்ளப்படும். திமுக அழுகிப்போன தக்காளி கூட்டுக்கு உதவாது குழம்புக்கும் உதவாது.

தமிழகத்தில் இரு புயல்கள் ஏற்பட்ட போதும் இறப்பைத் தடுத்தது அரசு. எங்கள் இயக்கத்தின் தலைவரை மரியாதையாக பேசினால் நாங்களும் மரியாதையாக நடந்து கொள்வோம். இல்லை என்றால் திமுக தலைவர் ஸ்டாலின் ராசா வெளியில் நடமாட முடியாது. மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்”  எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com