\
“எனக்கு மனநல பாதிப்பு ஏதுமில்லை” - போலீசிடம் பாடகி சுசித்ரா விளக்கம்

“எனக்கு மனநல பாதிப்பு ஏதுமில்லை” - போலீசிடம் பாடகி சுசித்ரா விளக்கம்

“எனக்கு மனநல பாதிப்பு ஏதுமில்லை” - போலீசிடம் பாடகி சுசித்ரா விளக்கம்
Published on

காணாமல் போனதாகக் கூறப்பட்ட திரைப்படப் பின்னணிப் பாடகி சுசித்ரா சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சுசி லீக்ஸ்‌. இந்தப் பெயரை தமிழ் திரையுலகமும், இணைய ரசிகர் உலகமும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. திரைப்படப் பின்னணிப் பாடகி சுசித்ரா பெயரின் சுருக்கமே சுசி. அதோடு அவர் வெளியிட்ட லீக்ஸை சேர்த்து சுசி லீக்ஸ் என்ற பெயரில் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் திரையுலகைச் சேர்ந்தவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 2017ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

அதன்பின் தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கணவர் கார்த்திகுமார் மூலம் விளக்கமளித்தார் சுசித்ரா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த சுசித்ரா, அடையாறில் உள்ள சகோதரி சுஜிதா வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சுசித்ரா காணாமல் போய்விட்டதாக கடந்த 11ஆம் தேதி அடையாறு காவல் நிலையத்தில் புகாரளித்தார் சுஜிதா. 

இதனையடுத்து சுசித்ராவின் செல்போன் மற்றும் கார் எண்ணை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சுசித்ரா தங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். தாம் காணாமல் போகவில்லை என்றும் சுஜிதாவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரது வீட்டிலிருந்துதான் வெளியேறி விட்டதாகவும் காவல்துறையினரிடம் சுசித்ரா தெரிவித்துள்ளார். 

வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கவே தம்மை சுஜிதா தேடுவதாகவும் காவல்துறையினரிடம் சுசித்ரா கூறியுள்ளார். தம்மை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடத்துவதால் குடும்பத்தினரை விட்டு விலகி விட்டதாக சுசித்ரா தெரிவித்துள்ளார். தமக்கு மனநல பாதிப்பு ஏதுமில்லை எனக்கூறியுள்ள அவர், ஆனாலும் காவல்துறையினரின் அறிவுறுத்தல்படி அண்ணாநகரில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com