சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக தான் சொல்லவில்லை - திருநாவுக்கரசர் விளக்கம்
கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்றும், எத்தனை காலம் தான் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது என திமுக மூத்த தலைவர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் தண்ணீர் பிரச்னையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், “தென் சென்னையில் 35 வட்டங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து நின்றால் நன்றாக இருக்கும். திமுக தனித்து நிற்க வேண்டும் என கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவோம். எத்தனை நாளைக்கு தான் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது?.
இது என்னுடயை கருத்து, திமுகவின் கருத்து அல்ல. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேறு கருத்து சொன்னால் அதையும் ஏற்போம். திருச்சியை பொறுத்தவரை தனித்து போட்டியிட வேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்துவோம்” என்று கூறினார்.
இதனையடுத்து, சொந்த செல்வாக்கில் வென்றதாக, திருநாவுக்கரசர் கூறியதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட காரணம் என கராத்தே தியாகராஜன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
“திமுகவின் கருத்தையே நேரு சொல்லியிருக்கிறார். திமுகவும் தோல்விகளை கடந்தே வெற்றி பெற்றுள்ளது. பல்லக்கு தூக்குமாறு நாங்கள் யாரும் சொல்லவில்லை. கூட்டணி குறித்து தலைமைகள் கூடி முடிவு செய்ய வேண்டும்” என்றார் கராத்தே தியாகராஜன்.
சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக தான் சொல்லவில்லை என்றும், கராத்தே தியாகராஜன் கூறும் கருத்து தவறானது என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய செல்வாக்கால் தான் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கேயும் தெரிவிக்கவில்லை. என்னுடைய செல்வாக்கால் நான் வெற்றேன் என கராத்தே தியாகராஜன் கூறியது தவறு. என்னுடைய கருத்து திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கராத்தே தியாகராஜன் கூறியது கண்டனத்திற்குரியது. கே.என்.நேரு என்ன சூழ்நிலையில் பேசினார், எதற்காக பேசினார் என்று தெரியவில்லை” என்றார்.