"மக்களுக்காக எனது உழைப்பைக் கொடுக்கிறேன்: ஆனால், யாருக்கும் பணம் கொடுக்கப் போவதில்லை" – அண்ணாமலை
செய்தியாளர்: சுரேஷ்குமார்
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டப் பேரவை தொகுதியில் இன்று தனது பரப்புரையை தொடங்கினார்.
மாதப்பூர் பகுதியில் பேசிய அவர், ”தமிழகத்தின் மாற்றத்திற்காகவும் பல நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் களத்தில் நின்று கொண்டிருக்கிறேன், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி. அப்படி ஆகும் பட்சத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் இல்லாமல் இலவசமாக குடிநீர் இணைப்பு கொண்டு வரப்படும்.
மத்திய அரசின் திட்டங்கள் இடைத் தரகர்கள் இல்லாமல் இலவசமாக உங்களை வந்தடைய வேண்டும். பல்லடம் தொகுதி மக்களுக்காக எனது உழைப்பையும் அன்பையும் கொடுக்கிறேன். ஆனால், யாருக்கும் பணம் கொடுக்கப் போவதில்லை என்றுதான் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளேன். மக்களை மலிவுபடுத்தி வாக்குகளை பெற்று 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடாது என்பதற்காக எல்லோரையும் மனிதர்களாக, தாய் தந்தையராக மதிப்பவனாக இதை கூறுகிறேன்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு நாடாளுமன்ற அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. அதனால் என்னை கோவையில் வந்து சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களை தேடி நான் வருகிறேன் உங்களுக்காக பணி புரிய ஒரு சேவகனாக வருகிறேன்” என்று பேசினார்.