1971-இல் திராவிட கழகம் நடத்திய பேரணி குறித்து பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
ஜனவரி 14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-இல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகாரளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கமளித்தார் அதில் "1971-இல் சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியையே நான் குறிப்பிட்டேன். ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பரட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். எனவே 1971-இல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்" என்றார் அவர்.