பொங்கலுக்குள் என் மகன் விடுதலையாவான் என்று நம்புகிறேன் - அற்புதம்மாள்
பொங்கலுக்குள் என் மகன் விடுதலையாவன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய அரசு உடனடியாக பேரறிவாளன் விடுதலை அறிவிப்பை அறிவிக்க வேண்டும். முதன்முதலாக என் மகனுடைய வாக்குமூலத்தை வெளியிட்ட தியாகராஜனுக்கும், தற்போது விடுதலைக்கு குரல் கொடுத்துள்ள முன்னாள் நீதிபதி தாமஸ் அவர்களுக்கும், நான் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். இவ்வழக்கு முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தில் வாதத்திற்கு வந்தபோதே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க அவரது வழக்கறிஞரிடன் நேரம் கேட்டோம், ஆனால் நேரம் ஒதுக்கவில்லை. நீதிபதி தாமஸ் விளக்கம் கொடுத்ததற்குப் பிறகு, தற்போது சோனியா காந்தியைச் சந்தித்து நான் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. வாக்குமூலம் வாங்கிய அதிகாரி, தீர்ப்பு சொன்ன நீதிபதி ஆகிய அனைவரும் சொன்ன பிறகும் என் மகன் இன்னமும் சிறையில் இருக்கிறார்.
எனக்கு சட்டம், நீதி குறித்தெல்லாம் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில், என் மகனை ஏன் இவர்கள் இன்னும் விடுதலை செய்யவில்லை என்பதுதான். ஒரு அம்மாவாக நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு தாயாக சோனியாவுக்கு புரியும் என்று நினைக்கிறேன். 27 ஆண்டுகளாக என் மகன் சிறையில் இருக்கிறான். என் மகன் தவறு செய்தான், செய்யவில்லை என்பது குறித்து இப்போது விவாதமே இல்லை. 27 ஆண்டுகளில் என் மகனுடைய முக்கியமான காலங்கள் சிறையில் கழிந்துள்ளன. என் மகனை விடுதலை செய்ய வேண்டும் என்று தற்போது ஒவ்வொருவராக கூறி வருகிறார்கள். விடுதலை விரைந்து நடந்தால் இனிமேலாவது என் மகன் இவ்வுலகத்தில் வாழ்வான்.
தமிழக அரசின் 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விளக்கத்திற்கு, அவர்கள் கொடுக்கும் சரியான விளக்கமே இவர்களின் விடுதலையை முடிவு செய்யும். சோனியா காந்திக்கு ஒரு பாதிப்பு என்றால், எனக்கு அதைவிட பெரிய பாதிப்பு, என் ஒரே மகன் 27 ஆண்டுகள் சிறையில் உள்ளான். ஒவ்வொரு வினாடியும் என் மகனின் விடுதலை அறிவிப்பை எதிர் நோக்கி காத்திருக்கிறோம். வருகிற பொங்கல் பண்டிகைக்குள் எனது மகன் விடுதலையாவான் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் அற்புதம்மாள் உடன் இருந்த தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு கூறும்போது, பொதுவாக ஆயுள் கைதிகள் விடுதலை என்பதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பு தரப்படும். இவர்கள் தூக்கு தண்டனைக்கு எதிராக வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, நெடுமாறன், மணியரசன், கார்முகில், வைகோ மற்றும் நான் அனைவரும் வாஜ்பாயைச் சந்தித்தோம், அப்போது அவர், நீங்கள் சோனியா காந்தியைச் சந்தித்து பேசுங்கள் என்று கூறினார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பத்தப்பட்ட யாரும் தூக்கிலிடப்படக்கூடாது என்று சோனியா காந்தி ஏற்கனவே கூறியிருந்ததாக வாஜ்பாயிடம் எடுத்துக் கூறினோம்.
மேலும், கருணாநிதி முதல்வராக இருந்த போது அவரிடம் 7 பேரின் விடுதலை தொடர்பாக கேட்கும் போது அவரும், சோனியா காந்தியிடம் இதற்காக பேசுங்கள் என்றே கூறினார். தற்போது நீதிபதி கே.டி.தாமஸ் 7 பேரை விடுதலை செய்ய சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதை நியாப்படுத்தியிருக்கிறார். இதற்கு மேலும் இவர்களுக்கு விடுதலை வழங்கப்படவில்லை என்றால், அதற்கு காரணம் அரசியல் பார்வையாக இருக்குமே தவிர, கருணை பார்வையாகவோ அல்லது மனித உரிமைப் பார்வையாகவோ இருக்காது. மேலும், நீதிபதி தாமஸ் கோபால் கோட்சே வழக்கை உதராணமாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக யாரையும் நேரில் சந்திக்க வேண்டியதில்லை, ஊடகங்களின் மூலமாகவே அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். இவ்வழக்கு தொடர்ந்து தமிழ் மக்களின் உணர்வு தொடர்பான வழக்காகவே இருந்து வருகிறது என்று கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க, கருணை காட்டும்படி உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசு 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.