“எப்போது வந்தாலும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயார்”- ரஜினி
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ட்விட்டர் டிரெண்டிங்கில் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி இருந்தது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனிலுள்ள தன்னுடைய இல்லத்தில் ரஜினி காந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
நேற்று ட்விட்டரில் டிரெண்டிங் ஆக "அடுத்த ஓட்டு ரஜினிகாந்த்துக்கு" என்ற கேள்விக்கு.. ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள், அவர்களை ஏமாற்றமாட்டேன் எனக் கூறினார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் ரஜினி அளித்த பதில்களும்:-
வாக்குப் பதிவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறதே?
“70 சதவீதம் வாக்குப்பதிவு என்பது நல்ல வாக்குப் பதிவுதான். சென்னையில் இருப்பவர்கள் மட்டும் 4 நாள் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுவிட்டனர். அதனால், சென்னையில் குறைந்துவிட்டது.”
கடும் வெயிலில் மக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள். இதனால், வாக்குப்பதிவு மையங்கள் அதிகரிக்க வேண்டும் என்கிறார்களே?
“கண்டிப்பாக வாக்குப்பதிவு மையங்கள் அதிகரித்தால் நன்றாக இருக்கும்.”
தேர்தலில் அதிகப்படியாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் குறித்து?
“தேர்தல் ஆணையம் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை.”
வாக்குப் பதிவின் போது சில இடங்களில் வன்முறை நடைபெற்றது குறித்து?
“இல்லை. கடந்த தேர்தல்களை ஒப்பிடும் போது குறைவான அளவில்தான் வன்முறை நடைபெற்றுள்ளது.”
நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா?
“மே 23ம் தேதி தெரிந்துவிடும்.”
18 சட்டமன்ற இடைத்தேர்தலின் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தேர்தலை சந்திப்பீர்களா?
“முடிவுகள் வரட்டும், அதன்பிறகு முடிவு செய்வோம்.”
ஒருவேளை ஆட்சி மாற்றத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா?
“எப்போது வந்தாலும் தயார் தான்.”