ரஷீத் மேஜிக், வார்னர் சாதனை: ஹைதராபாத்துக்கு அசத்தல் வெற்றி
பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கேப்டன் வார்னர், ஐபிஎல்லில் அதிக அரைசதம் எடுத்து சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்த குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்தார்.
ஹைதராபாத் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்குமான கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிவைன் ஸ்மித் 37 ரன்களும், தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்தனர். இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, மெக்கல்லம், ஆரன் பின்ச், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 138 ரன்கள் என்ற வெற்றி இலக்கை டேவிட் வார்னர், மோசஸ் ஹென்ரிகஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 16-வது ஓவரிலேயே ஹைதராபாத் அணி எட்டியது. கேப்டன் வார்னர் 45 பந்துகளில் 76 ரன்களும், ஹென்ரிகஸ் 39 பந்துகளில் 52 ரன்களும் ஆட்டமிழக்காமல் விளாசினர்.
டேவிட் வார்னர் இருபது ஓவர் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். குஜராத் அணியுடனான போட்டி, வார்னர் கலந்து கொண்ட 224-வது இருபது ஓவர் போட்டியாகும். ஐபிஎல் போட்டியில் அதிக அரைசதம் கண்டவர் இவர். 33 அரைசதம் எடுத்துள்ளார்.