மெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்
கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போனதை பார்த்திருப்போம். ஆனால், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த 7 பெண்கள் கூட்டத்தில் தங்கள் கணவர் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தனர்.
தமிழக பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனத் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறைகள் வரும். இதனால் பொங்கல் விடுமுறைக்கு மக்கள் அனைவரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் காணும் பொங்கலுக்குச் சுற்றுலா தலங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படும்.
இந்த ஆண்டும் காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வங்கக் கடலில் எழுந்த அலைகளை மறைத்தது மனிதர்களின் தலை. அந்தளவிற்கு எங்கு காணினும் மக்கள் வெள்ளம். மெரினா கடற்கரையில் 4 லட்சம் பேர் திரண்டதாக தகவல்கள் தெரிவித்தன.
பொதுவாக கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவது வாடிக்கை. இதனால் அவர்களை கண்டுபிடிக்க குழந்தைகளின் கைகளில் பட்டை அணிவித்து அதில் பெற்றோர் மற்றும் காவல்துறை எண்களை எழுதி வைக்கும் வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது சென்னை காவல்துறை. இந்த ஆண்டும் அந்த முறை பின்பற்றப்பட்டது. கூட்டத்தில் 16 குழந்தைகள் காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்தனர்.
அதுமட்டுமின்றி தங்கள் கணவரைக் காணவில்லை என 7 பெண்கள் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் பெற்றோரை குழந்தைகள் பிரிந்து விட்டால் அவர்களைத் தேடிப் பிடிப்பது கடினம். ஆனால், கணவரை மனைவியோ, மனைவியை கணவரோ கண்டுபிடிப்பதில் என்ன சிரமம் இருக்கும்.
இன்றைய சூழலில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனக் கூறலாம். அப்படியிருக்கையில் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அதையும் மீறி தனது கணவரைக் கண்டுபிடித்து தரக்கோரி 7 பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். தொலைந்தது குழந்தையோ அல்லது பெரியவரோ அவர்களை கண்டுபிடித்து தருவது காவல்துறையின் கடமை. அந்த வகையில் 16 குழந்தைகள் மற்றும் 7 ஆண்களைக் கண்டுபிடித்துக் கொடுத்தது காவல்துறை.