காரிலிருந்து மனைவியை தள்ளிய கணவர் - சிசிடிவி பதிவுகள்
கோவையில் ஒரு நபர் ஓடும் காரில் இருந்து தனது மனைவியை கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த அருணும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து வாழ நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்ததால், தனது மும்பை வேலையை உதறி விட்டு, கணவருடன் சேருவதற்காக ஆர்த்தி கோவை வந்துள்ளார். எனினும் மனம் மாறாத கணவர் அருண், தொடர்ந்து ஆர்த்தியிடம் வரதட்சணை கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துடியலூரில் இருந்து சென்னைக்கு புறப்படலாம் எனக் கூறி, ஆர்த்தியை அழைத்துள்ளார் அருண். இதை நம்பி கணவருடன் ஆர்த்தி புறப்பட்டபோது, திடீரென ஓடும் காரின் கதவை திறந்து, ஆர்த்தியை கீழே தள்ளியுள்ளார் அருண். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம், அங்கிருந்த ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கீழே தள்ளியதில் படுகாயமடைந்த ஆர்த்தி, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், சென்னை சென்ற கணவர் அருணை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.