மனைவியுடன் சேர்ந்து தாயைக் கொன்று கொல்லைபுரத்தில் புதைத்த மகன்
மயிலாடுதுறை அருகே தாயைக் கொன்று வீட்டின் கொல்லைபுரத்தில் புதைத்த மகன் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தில் தாய் உய்யம்மாள் மற்றும் மனைவி பூசம் ஆகியோருடன் வசித்து வந்தவர் கலியமூர்த்தி (55). இவருக்கு திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனர். உய்யம்மாளுக்கும், பூசத்திற்கு அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் கைகலப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் உய்யாம்மாளை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. உய்யம்மாள் முதியோர் உதவித்தொகை வாங்குவதற்கு வராததால் அப்பகுதியில் உள்ளவர்கள் கலியபெருமாளிடம் கேட்டுள்ளனர்.
தனது தாய் வெளியூருக்கு சென்று விட்டதாக கலியமூர்த்தி தெரிவித்துள்ளார். உய்யம்மாள் வெளியூர் செல்வதென்றால், ஊரில் அவருக்கு பழக்கமான சிலரிடம் கூறாமல் கண்டிப்பாக செல்லமாட்டார். இதனால் கலியபெருமாள் மற்றும் பூசம் மீது ஊராருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஊர்நாட்டாமை சுப்பையன் கலியபெருமாளை சந்தித்து உய்யம்மாள் தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு கலியபெருமாள் மழுப்பலான பதில்களை கூற, சில கிடுக்கிப்பிடி கேள்விகளை அடுக்கியுள்ளார் சுப்பையன். இந்தக் கேள்விகளின் இறுதியில் சில திடுக்கும் உண்மைகளை கூறியுள்ளார் கலியபெருமாள்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவிக்கும், தாய்க்கும் சண்டை ஏற்பட்டபோது கலியபெருமாள் தாயை பிடித்துத்தள்ளியுள்ளார். கீழே விழுந்த உய்யம்மாள் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து கொலையை மறைக்க திட்டமிட்ட கலியபெருமாள், தனது ஆடு ஒன்றை கொன்றுள்ளார். அக்கம்பத்தினரிடம் ஆடு இறந்துவிட்டது, அதைக் கொல்லைப்புரத்தில் புதைக்கப்போகிறேன் எனக்கூறி ஆட்டுடன் சேர்த்து தாயின் உடலையும் புதைத்துள்ளார். இந்தத் தகவலை கேட்ட சுப்பையன் அதிர்ச்சி அடைந்து, உடனே பெரம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். காவல்துறையினர் வந்து கலியபெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் உய்யம்மாள் புதைக்கப்பட்ட இடத்திற்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வட்டாட்சியர், மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உய்யம்மாவின் உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது.