மதுரை - கலப்பு திருமணம்; கணவர் கொலை - “கொலைகாரங்க எதிர்லயே இருக்காங்க; எனக்கு அரசும் ஏதும் செய்யல”

கொலை, மரணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு சட்டப்படி நிவாரணம் செல்கிறதா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த நீதி என்ன? ஆர்டிஐ சொல்லும் தகவல் என்ன?
பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்pt web

செய்தியாளர் பிரசன்ன வெங்கடேஷ்

வன்கொடுமை தடுப்புச் சட்டம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது.. சாதி ரீதியான தாக்குதல், படுகொலைகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பட்டியலின மக்களுக்கு தீர்வு ஏற்படுத்தி மறுவாழ்வு கிடைக்க வழிவகை செய்யும் சட்டம். இதன்படி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆயிரத்து 518 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 480 வழக்குகளுடன் மதுரை முதலிடத்தில் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதேபோல் தேனியில் 332, திண்டுக்கல் 244, விருதுநகரில் 233, ராமநாதபுரத்தில் 229 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் சொல்வது என்னவென்றால், கொலை, மரணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு 3 மாதங்களில் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல், மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வீட்டுமனை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றையும் வழங்கவேண்டும். ஆனால் இவை எதுவும் கிடைக்கவில்லை என்கிறார் மதுரை விராதனூர் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் சத்தியபிரியா.

இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்த நிலையில், கணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் நிவாரணத்தை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என சத்தியபிரியா வேதனை தெரிவிக்கிறார். கணவரை கொலை செய்தவர்களை தண்டிக்க, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சத்திய பிரியா கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

கணவரை கொன்றவர்கள் என் எதிரிலேயே இருக்கிறார்கள்

பாதிக்கப்பட்ட சத்திய பிரியா கூறுகையில், “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம் அரசு வாயிலாக உங்களுக்கு வேலை கிடைக்கும்; பல சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும் என சொன்னார்கள். ஆனால் இப்போது வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் நாங்கள் போய் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அதற்கான பதிலை அவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை.

எனக்கு சரியான வருமானம் இல்லை. என் பிள்ளையை அடுத்த மாதம் நான் பள்ளியில் சேர்க்க வேண்டும். என் படிப்புக்கும் என் வாழ்க்கைக்கும் நான் என்ன செய்யப்போகிறேன் என எனக்கு இன்னும் தெரியவில்லை. அரசாக பார்த்து எனக்கு ஏதாவது நல்லது செய்தால்தான் உண்டு.

என் கணவரை வெட்டிக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவர்கள் 6 பேரும் என் பிள்ளையை நான் தூக்கிக்கொண்டு போகும்போது என் எதிரிலேயே வருகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு வேதனையாக உள்ளது. ” என்கிறார் கண்ணீருடன்.

நிவாரணங்கள் விரைவாக கிடைப்பதில்லை

பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் போராடிதான் நிவாரணம் பெறும் சூழல் உள்ளதாக தெரிவிக்கிறார் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்ற வழக்கறிஞர் சந்தானம். அவர் கூறுகையில், “எஸ்சி எஸ்டி வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரணங்கள் விரைவாக கிடைப்பதே இல்லை. மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. நமது கோரிக்கை என்னவெனில் இப்படிப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். அதற்காக கொடுக்கப்படும் நிவாரணங்களை விரைவாக கொடுக்க வேண்டும்” என தெரிவிக்கிறார்.

எஸ்சி எஸ்டி வழக்குகளை மட்டும் பார்க்கும் நீதிமன்றங்கள் வேண்டும்

பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி கிடைக்க மாவட்டங்கள்தோறும் இலவச சட்ட ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என்கிறார் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன்.

அவர் கூறுகையில், “எஸ்சி எஸ்டி வழக்குகளை மட்டுமே பார்க்கக்கூடிய ஸ்பெஷல் நீதிமன்றங்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இம்மாதிரியான நீதிமன்றங்கள் இல்லை. எஸ்சி எஸ்டி கமிஷன் இந்த சட்டத்தையும் விதிமுறைகளையும் கண்காணிக்கக்கூடிய கமிஷனாக இருக்க வேண்டும். 60 நாட்களில் விசாரணையை முடிக்கக்கூடிய வழக்குகளின் சதவீதத்தை பார்த்தால் 1% கூட இருக்காது” என கூறுகிறார்.

பாதிக்கப்படும் பட்டியலின மக்களுக்கு நிவாரணமும், நீதியும் கிடைப்பதே ஆறுதலாக அமையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com