“ஜிம் உரிமையாளருடன் சென்ற மனைவியை மீட்டுத் தாருங்கள்” - கணவர் பரபரப்பு புகார்
ஜிம் உரிமையாளருடன் சென்ற தன் மனைவியை மீட்டுத்தருமாறு கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்துவருபவர் ராஜேஷ்(26). இவர் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வருடமாகியும் குழந்தை இல்லை. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கனிமொழிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அதனை குறைப்பதற்கு கனிமொழி உடற்பயிற்சி கூடத்தை நாடியுள்ளார்.
மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் கனிமொழி சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். அப்போது யோகேஷ் கண்ணாவிற்கும், கனிமொழிக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கணவர் ராஜேஷ் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ் தனது நண்பர்கள் உதவியுடன் கனிமொழியை அழைத்து சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ராஜேஷ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “யோகேஷ் கண்ணா தன்னை தொடர்புகொண்டு, என் மனைவியை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் மிரட்டுகிறார். என் மனைவியை மீட்டுத்தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி வினோதினி, ராஜேஷ், அவரது மனைவி கனிமொழி, மற்றும் உடற்பயிற்சி கூட உரிமையாளர் யோகேஷ் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.