யூடியூப் பார்த்து பிரசவம் செய்து பெண் பலி : கணவர் கைது !

யூடியூப் பார்த்து பிரசவம் செய்து பெண் பலி : கணவர் கைது !
யூடியூப் பார்த்து பிரசவம் செய்து பெண் பலி : கணவர் கைது !

யூடியூப் வீடியோ பார்த்து பெண் பலியான சம்பவத்தில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் பனியன் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நல்ல வசதியான வாழ்க்கை மேற்கொண்ட இவர்களுக்கு ஹிமானி என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. இந்தத் தம்பதியினர் இயற்கை மருத்துவத்தின் மீது அலாதியான ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுக்கு ஆங்கில மருத்துவம் என்பது ஒரு பொருளாதாரம் மிகுந்த மற்றும் அதிக செலவை உருவாக்கக்கூடிய மருத்துவம் என்ற எண்ணம் இருந்து வந்தது.

கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யாவின் பழக்கமானது கிருத்திகாவிற்கு ஏற்பட்டுள்ளது. லாவண்யா தம்பதியினரின் மகள் இயல்மதி சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்ததாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் லாவண்யா தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதனால் தனக்கும் சுகப்பிரசவம் வீட்டிலேயே நடக்க வேண்டும் என ஆசைப்பட்டார் கிருத்திகா. இதனை அடுத்து கார்த்திகேயன் கிருத்திகா  தம்பதியினர் இருவரும் பேசி வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்வதென முடிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் யு டியூப் மூலமாக பல்வேறு சுகப்பிரசவம் குறித்த வீடியோக்களை பார்த்து உள்ளனர். மேலும் இரண்டாவது குழந்தை உருவானதும்  முதல் மாதம் முதலே எந்தவிதமான மருத்துவமனைக்கும் செல்லாமல் தவிர்த்து வந்துள்ளனர். இது குறித்து கார்த்திகாவின் தந்தை சுப்ரமணி பலமுறை வற்புறுத்தியும் கார்த்திகேயன் தம்பதியினர் கட்டாயமாக மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி கிருத்திகாவிற்கு வலி  ஏற்பட்டுள்ளது.

லாவண்யாவை தொடர்பு கொண்ட  கிருத்திகா தனது வீட்டிற்கு  வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து லாவண்யா பிரவின் தம்பதியினர் மற்றும் கார்த்திகேயன் , கார்த்திகேயனின் தாயார் காந்திமதி ஆகியோர் கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது கிருத்திகாவிற்குப் பெண்  குழந்தை நல்ல விதமாக பிறந்துள்ளது. எனினும்  நஞ்சுக்கொடியானது வெளியே வராததால் கிருத்திகா  மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருத்திகாவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து கிருத்திகாவின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் மின்மயானத்தில் எரிப்பதற்கு மருத்துவரின் கடிதம் இல்லாத காரணத்தால் மின் மயானத்தில் எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரன் நல்லூர் ஊரகக் காவல் நிலையத்தில் தனது மகளின் மரணத்தில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒரு புகார் அளித்தார். இதனை அடுத்து கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மின் மயானத்தில் எரிக்கப்பட்டது.

கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com