போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்த மனைவி: வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கணவர்..!
போலி சாதி சான்றிதழ் மூலம் மதுரையில் சகோதரிகள் இருவர் அரசு பணியில் சேர்ந்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
மதுரை பரசுராம்பட்டியைச் சேர்ந்த லாரன்சுக்கும் தல்லாகுளத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண்ணுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கமலா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்திற்கு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அரசுப் பணியில் இருப்பதால்தான் மனைவி தன்னை மதிக்கவில்லை என்று எண்ணிய லாரன்ஸ், பணியில் கமலா சேர்ந்தது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.
அதில், அவருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. கிறிஸ்தவரான கமலா, 1993 ஜூன் மாதத்தில் மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், கிறிஸ்தவ மதத்தில் ஒரு பிரிவுக்கு சாதி சான்றிதழை பெற்றுவிட்டு, அதே ஆண்டு நவம்பரில் பட்டியலின வகுப்புக்கான சான்றிதழையும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. போலி சாதி சான்றிதழ் மூலம் தனது மனைவி பணியில் சேர்ந்திருப்பதாக கூறும் லாரன்ஸ், கமலாவின் சகோதரியும் இதே முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
இட ஒதுக்கீட்டில் அரசுப் பணியை பெறுவதற்காக ஏராளமானோர் போலி சான்றிதழ் பெற்று மதுரையில் அரசு பணியில் சேர்ந்திருப்பதாகவும் முழுமையான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் லாரன்ஸ் தெரிவிக்கிறார். நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் துறையினரிடமே இதுகுறித்த புகார் மீதான விசாரணை செல்வதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறுகிறார்.
இதுதொடர்பாக மதுரை வடக்கு வட்டாட்சியர் சுரேஷிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.