ஊத்தங்கரை அருகே மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற கணவன் தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்(38). இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா(32). இந்தத் தம்பதிக்கு மதன்(9), வைஷ்ணவி(6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கேரளாவிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் சக்திவேல் தன்னுடைய மனைவி நதியாவிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அதன்படி இன்றும் கணவர் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல், நதியாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
மேலும், சக்திவேல் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.