சென்னையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கும்மாளம்: குறிவைத்து பிடித்த போலீஸ்!
பூந்தமல்லி அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று கூடிய ரவுடி கும்பலை துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் முக்கிய ரவுடிகளில் ஒருவரான டெனியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக, குன்றத்தூர் ஒன்றியம் மலையம்பாக்கம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் நேற்றிரவு திரண்டனர். அவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் மலையம்பாக்கம் பகுதியில் உள்ள லாரி செட் ஒன்றில் குவிந்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது போதையில், ஆடல் பாடலுடன் உற்சாக வெள்ளத்தில் இருந்துள்ளனர். இதனை முன்பே அறிந்து வைத்திருந்த சென்னை காவல்துறை, அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் தலைமையிலான பெரும் படையுடன் அங்கு சென்று சுற்றிவளைத்தனர்.
இதனை அறிந்த ரவுடிகள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த 67 ரவுடிகளை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து வீச்சரிவாள், கத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இரவோடு இரவாக மாங்காடு, போரூர், பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தப்பி ஓடிய 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை விடிய, விடிய தேடும் பணியில் ஈடுபட்டு, அப்பகுதியை தங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எதுவும் சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சினிமா பாணியில் அதிரடியாக நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் மலையம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.