அரியலூர்| பட்டியலின ஆசிரியர் ஓய்வறையில் மனிதக் கழிவு: அறிக்கை அளிக்க உத்தரவு
அரியலூர் மாவட்டத்தில் பட்டியலின ஆசிரியர்கள் பயன்படுத்திய ஓய்வறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாநில ஆதிதிராவிடர் நல ஆணையம் விசாரணை மேற்கொண்டு, டிசம்பர் 15க்குள் அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாதி ரீதியாக இரு பிரிவாக ஆசிரியர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்த ஓய்வறையில், நவம்பர் 10ஆம் தேதி மர்ம நபர்கள் மனித கழிவுகளை வீசியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவரான நீதிபதி எம்.வி.முரளிதரன், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரணை நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை ஜெயங்கொண்டம் துணை கண்காணிப்பாளர் அறிக்கையாக அளிக்கவும் உத்தரவிட்டனர்.

