பிரசவத்தின்போது வயிற்றில் சிக்கிய கத்தரிக்கோல் - 12 ஆண்டுக்கு பின் பெண்ணுக்கு கிடைத்த நீதி

பிரசவத்தின்போது வயிற்றில் சிக்கிய கத்தரிக்கோல் - 12 ஆண்டுக்கு பின் பெண்ணுக்கு கிடைத்த நீதி
பிரசவத்தின்போது வயிற்றில் சிக்கிய கத்தரிக்கோல் - 12 ஆண்டுக்கு பின் பெண்ணுக்கு கிடைத்த நீதி

பிரசவத்தின் போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்ததால் 12 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்துக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.

இதையடுத்து மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாலாஜி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பியிருந்தார்.

இதுசம்பந்தமாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், திருவள்ளூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அளித்த அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களில் இருந்து, மருத்துவர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையை எச்சரிக்கையுடன் செய்திருந்தால், குபேந்திரி வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்திருக்க மாட்டார்கள்; 12 ஆண்டுகள் அப்பெண்ணும் வலியில் துடித்திருக்க மாட்டார் எனக் கூறிய ஆணைய உறுப்பினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com