\
நிஷாந்த், மீனாட்சி
நிஷாந்த், மீனாட்சிinstagram / pt

தனிஷ்க் நகைக்கடை கொள்ளையன் நிஷாந்த் பிடிபட்டது எப்படி? பேருந்து ஓட்டுநர் பரபரப்பு விளக்கம்!

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்து சென்று தலைமறைவாக இருந்த கொள்ளையன் நிஷாந்த் பிடிபட்டது எப்படி என பேருந்து ஓட்டுநர் விளக்கம் கொடுத்துள்ளார்.
Published on: 
Summary

மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் ₹15 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நிஷாந்த், தருமபுரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பேருந்து ஓட்டுநரின் சந்தேகத்தால் தகவல் கிடைத்தது. முகமூடி அணிந்த நிஷாந்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், போலீசாரின் உதவியுடன் அவர் பிடிபட்டார்.

மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் ₹15 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இக்கொள்ளை தொடர்பாக, இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் குற்றவாளியான நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி என்று சொல்லப்பட்ட நிஷாந்த் என்பவரை போலிசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்தனர். கொள்ளையன் நிஷாந்த் 5 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், தருமபுரி சேஷம்பட்டியில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Nishant & Meenatchi
Nishant & MeenatchiPT

கொள்ளைக்கு பிறகு இருசக்கர வாகனம், கார், பேரூந்து என மாறி மாறி பயணம் செய்து வந்த நிஷாந்தை, ஆம்னி பேருந்தில் பயணம் செய்தபோது டிரைவருக்கு சந்தேகம் வரவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தருமபுரி சேஷாம்பட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தசூழலில் கொள்ளையன் நிஷாந்த் எப்படி பிடிபட்டான் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் பேருந்து ஓட்டுநர் மாதேஸ்வரன்.

நிஷாந்த், மீனாட்சி
’தைரியமா இரு, பயப்படாத.. நாங்க இருக்கோம்’ - யூடியூபர் மீனாட்சிக்கு ஆறுதல் சொன்ன குடும்பத்தினர்!

ஓசூரில் இருந்து தனியார் பேருந்தில் முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டு பயணம் செய்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக மாதேஸ்வரன் கூறியுள்ளார்.

நிஷாந்த் பிடிபட்டது குறித்து விளக்கிய அவர், ஓசூரில் உள்ள தனிஷ் ஜுவல்லரி அருகே வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு செமா டிராவல்ஸ் பேருந்தை இயக்கத் தொடங்கினேன். அப்போது முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டு ஒருவர் பேருந்தில் ஏறினார். ஆரம்பத்தில் அவர் மீது எனக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை.

பின்னர் ராயக்கோட்டை பைபாஸ் பகுதியில் பேருந்து நின்றபோது, எங்களது கிளீனர் விஷ்வாவிடம் அந்த நபர் செல்போனை வாங்கிப் பேசினார். அப்போது தொலைபேசியில் 'நிசாந்த்' என்ற பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதை கிளீனர் கவனித்துள்ளார்.

அதன்பிறகு அந்த நபர் முகமூடியைக் கழற்றியபோது, சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்துடன் அவரது தோற்றம் ஒத்திருந்ததால், கிளீனர் விஷ்வா என்னிடம் வந்து தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, சிறுநீர் கழிக்க வேண்டும், பேருந்தை நிறுத்துங்கள் என்று அந்த நபர் கேட்டார். தொடர்ந்து அவர் முகத்தை மறைத்துக்கொண்டே இருந்ததால் எனக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக அதிமான்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் எனது நண்பரும், பள்ளித் தோழருமான முருகனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த விவரங்களைத் தெரிவித்தேன்.

அவர் கூறிய ஆலோசனையின்படி, போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பேருந்தை குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சென்றேன். அப்போது போலீசார் வருவதை உணர்ந்த அந்த நபர், திடீரென பேருந்திலிருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார்.

ஆனால், அங்கு தயாராக இருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை அருகில் இருந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்று போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது பையில் முகமூடிகள், கையுறைகள், தொப்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன. போலீசாரின் விசாரணையில் அந்த நபர் நிசாந்த் என்பது தெரியவந்தது.

அதன்பிறகு அவரை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன். பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே சந்தேகமடைந்த நபர் குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தேன். எனது தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து செயல்பட்டு அவரைப் பிடித்தனர் என கூறினார்.

நிஷாந்த், மீனாட்சி
தோழியின் ஆசைக்காக நகைகள் கொள்ளை.. காட்டிக்கொடுத்த காதலனின் டேட்டூ.. வெளியான அதிர்ச்சி!