திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி?

திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி?
திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி?

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் ரூ. 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்படி என்பது தெரிய வந்துள்ளது.

திருச்சி மலைக்கோட்டை மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரியின் கிளை உள்ளது. 3 அடுக்கு கட்டடத்தில் இயங்கி வரும் இந்தக்கடை 24 மணி நேரமும் காவலாளிகளின் கண்காணிப்பில் இருக்கும். கடையின் பின்புறம் புனித ஜோசப் பள்ளி உள்ளது. கடை மற்றும் பள்ளி வளாகத்துக்கு இடையே ஒரு சுவர் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றனர். காலையில் வந்து பார்த்த போது தரைத்தளத்தில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இரவுப் பணியில் இருந்த 6 காவலாளிகளும் கடையின் முன்பக்கம் இருந்ததால் பின்புற பக்கவாட்டு சுவர் வழியாக கொள்ளையர்கள் நுழைந்தது அவர்களுக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. அங்கு சிசிடிவி கேமராவும் இல்லை. 
காலாண்டு விடுமுறை என்பதால் புனித ஜோசப் பள்ளிக்கு பகல் நேரத்தில் கூட யாரும் வருவதில்லை. மேலும், அப்பகுதியில் அருகில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் குடியிருப்புவாசிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதையும் கொள்ளையர்கள் நோட்டமிட்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சுத்தியல், இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுவற்றை உடைத்திருக்கலாம் எனத்தெரிகிறது. 

பொம்மை முகமூடி

பொம்மை முகமூடி அணிந்த 2 பேர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்திருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதிகாலை 2.11 மணி முதல் 4.28 வரை சுமார் 2 மணிநேரம் கொள்ளையர்கள் கடைக்குள் இருந்துள்ளனர். கைரேகை பதியாமல் இருக்க கையுறைகளை அணிந்திருந்த அவர்கள் மோப்ப நாயிடம் சிக்காமல் இருக்க வழிநெடுகிலும் மிளகாய்ப் பொடியை தூவிச் சென்றுள்ளனர். 

இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ள காவல்துறையினர், நகைக்கடையில் பணிபரியும் 120 ஊழியர்களின் கைரேகைகளையும், காவலாளிகளின் கைரேகைகளையும் பதிவு செய்து வருகின்றனர். விடுமுறையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் காவலாளிகள் 3 பேரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாயும் கொள்ளை நடந்த நகைக்கடையில் இருந்து கரூர் புறவழிச்சாலை வரை ஓடிச் சென்று நின்றது. 

இதுமட்டுமின்றி, மாநகராட்சிக்குட்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருக்கும் வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் நகைகளை பைகளில் வைத்து அள்ளிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com