
பல்வேறு தனியார் மற்றும் அரசுடைமை வங்கிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க முயற்சி செய்துவரும் நிலையில், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் 5.75 சதவீதத்தில் தொடங்கி 8.5 சதவீதம் வரை வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் சிறு நிதி வங்கிகளில் ஒன்றான சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், மூன்று வருட வைப்புத் தொகைக்கு 8.6 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதேபோல, ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க், உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, ஃபின்கேர் சிறு நிதி வங்கி, ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி உள்ளிட்ட சிறு வங்கிகளும் வைப்புத் தொகைக்கு ஏறத்தாழ இதே வட்டியை வழங்குகின்றன. பெரிய வங்கிகள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தாலும், அவை வைப்புத் தொகைக்கு அளிக்கும் வட்டி விகிதங்கள் குறைவாகவே உள்ளன. குறிப்பாக, பிரபல தனியார் வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், பந்தன், இண்டஸ் இந்த் உள்ளிட்ட வங்கிகள் 7 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
வட்டி விகிதங்கள் இப்படி உள்ள சூழலில், வாடிக்கையாளர்கள் சில முக்கிய அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக வட்டி ஈட்ட பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றாலும், சிறிய வங்கியோ பெரிய வங்கியோ, பணத்தை வைப்புத் தொகையாக முதலீடு செய்வதற்கு முன் அதில் உள்ள சாதக - பாதகங்களை வாடிக்கையாளர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டு அதன்பிறகு இறுதி முடிவை எடுப்பதே சரியாக இருக்கும்.
ஏலச்சீட்டு மற்றும் சிட்ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் நடைபெறுவதை பார்த்து வருகிறோம். ஆசையைத் தூண்டி, பேராசையை உண்டாக்கி அதன்மூலம் பெருநஷ்டம் ஏற்படுத்துவதே மோசடிப் பேர்வழிகள் தான். நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை இத்தகைய மோசடி நபர்களிடம் இழந்து ஏன் கஷ்டப்பட வேண்டும்? காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளைப் பின்பற்றுவதே நம் பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான சிறந்தவழி என்பதை மறந்துவிடக் கூடாது!