நெருங்கும் தீபாவளி.. அடுத்தடுத்து நிகழும் பட்டாசு விபத்துகள் - நாம் செய்ய வேண்டியவை என்ன?

நெருங்கும் தீபாவளி.. அடுத்தடுத்து நிகழும் பட்டாசு விபத்துகள் - நாம் செய்ய வேண்டியவை என்ன?
நெருங்கும் தீபாவளி.. அடுத்தடுத்து நிகழும் பட்டாசு விபத்துகள் - நாம் செய்ய வேண்டியவை என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கும் மகிழ்ச்சி ஒருபுறமிருக்க ஆங்காங்கே பட்டாசு விபத்து தொடர்பான செய்திகளும் வரிசை கட்டுகின்றன. அதற்கு அண்மையில் நடந்த சங்கராபுரம் விபத்தே உதாரணம். அனுமதியின்றி கடை அல்லது தொழிற்சாலை நடத்துதல், உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருத்தல், கவனக்குறைவு, மின்கசிவு உள்ள இடங்களில் பட்டாசு நெருப்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்துதல் என விபத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள சங்கராபுரம் பகுதியில் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தாயில்பட்டியில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் காட்பாடியில் பட்டாசு விற்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் என்ற கிராமத்தில் பட்டாசு தயாரித்து வந்த ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உடல் கருகியும் சிதறியும் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றனர். 2020 அக்டோபர் மாதத்தில் மதுரை அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இப்படி ஆண்டுக்கு பட்டாசு தயாரிப்பு, விற்பனை என பல இடங்களிலும் விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்கின்றன.

பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கும் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கும் தீயணைப்புத் துறை சார்பாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பட்டாசுக் கடைகளுக்கான விதிமுறைகள்

பட்டாசுக் கடைகள் தரைத்தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும். கடையில் 2 நுழைவு வாயில்கள் இருக்க வேண்டும். பட்டாசுக் கடைக்கு அருகே டீ கடை, ஹோட்டல் இருக்கக் கூடாது. 250 சதுர அடியில் பட்டாசுக் கடை இருக்க வேண்டும். பட்டாசுக் கடையில் NO SMOKING பலகை வைப்பது கட்டாயம். பட்டாசுக் கடையில் தண்ணீர் வாளி எப்போதும் இருக்க வேண்டும். ஆபத்து ஏற்பட்டால் மக்கள் எளிதில் வெளியில் செல்லும் வகையில் கடை இருக்க வேண்டும். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த தகவல் கண்டிப்பாக இருக்க வேண்டும். பட்டாசுக் கடைகளில் பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டியவை

சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது. குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும். வெற்றுக்கைகளால் பட்டாசு கொளுத்தக் கூடாது. முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். மின்கம்பங்கள் அருகே பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையின் நியூஸ் 360 டிகிரி நிகழ்ச்சியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com