தமிழில் நடைபெறும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி? - நீதிமன்றம் கேள்வி
தமிழில் நடைபெறும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி? என்று ரயில்வே துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே குருப்-டி மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணையை வெளியிடப்பட்டது. அதில் மாநில மொழி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஓராண்டுக்குப் பிறகு 2014 நவம்பரில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் 2014ல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “தேர்வுக்கு பல தமிழர்கள் விண்ணப்பித்தும், சான்றளிப்பவர் கையெழுத்து இல்லை எனக் கூறி, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் சான்றளிப்பவரின் கையெழுத்து கூட இல்லாத நிலையிலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதேபோல, இந்த ரயில்வே தேர்வுகளில் புகைப்படம் ஒட்டி, புகைப்படம் ஒட்டாமல் என இரண்டு விதமான தேர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. வட மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதிகாரிகளுக்கு பணம் கைமாற்றப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தபோது, மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார். விசாரணையில், “பல வட மாநிலத்தவர் தமிழில் தேர்வு என கூறி பணி வழங்கபட்டது எப்படி? இதேபோல வேறு மாநில தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தால் பெரிய பிரச்சினையாக்கி தேசிய அளவிலான பிரச்சினையாக்கி இருப்பார்கள். ஏன் ஆண்டி இண்டியன் என்று கூட சொல்லிருப்பாங்க?” என்று நீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது.
அதேபோல், இந்த வழக்கின் மனுதாரர் வக்கீல் நீதிமன்றம் வந்தபோது, “இத்தனை ஆண்டுகளாக ஏன் வழக்கை பட்டியலிட முயற்சிக்கவில்லை. இப்போ வந்திருக்கீங்க. எதிர் மனுதாரரான சிபிஐ தரப்பு தானே இந்த வழக்கை தற்போது பட்டியலிட முயற்சித்துள்ளது” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
முன்னதாக, தபால் துறை தேர்விலும் இதேபோல் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்து, பின்னர் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.