மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் ? உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் ? உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் ? உயர்நீதிமன்றக் கிளை கேள்வி
Published on

மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள்..? எத்தனை சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன..? போதை நபர்களின் தொல்லைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை அழகர்கோவில் நாயக்கன்பட்டி எம்ஏவிஎம்எம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சரவணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், " நாயக்கன்பட்டியில் எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் போதை மறு வாழ்வு மையம் செயல்படுகிறது. எங்கள் கல்லூரியில் 1025 மாணவர்களும், 130 மாணவிகளும் பயில்கின்றனர். இங்குள்ள விடுதியில் 120 மாணவர்கள் தங்கியுள்ளனர். மறுவாழ்வு மையத்தில் 60 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

போதை மறுவாழ்வு மையத்தின் அருகே டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடி போதையில் இருந்து மீட்பவர்களுக்கான மறு வாழ்வு மையம் அருகே டாஸ்மாக் கடை திறப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் எம்ஏவிஎம்எம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் போதை மறுவாழ்வு மையம் அருகே டாஸ்மாக் கடை, மதுபான கூடம் திறக்கவோ, வேறு இடங்களில் இருந்து இடமாற்றம் செய்யவோ கூடாது " என கூறியிருந்தார்.

இந்த மனுவை. விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, எம்ஏவிஎம்எம் பாலிடெக்னிக் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என  உத்தரவிட்டனர். மேலும், மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன?  எத்தனை சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன? போதை நபர்களின் தொல்லைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com