கோயம்பேடு சந்தை மூலம் பரவும் கொரோனா.. எங்கெங்கு எத்தனை பேர்..?
கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
அதன்படி கடலூரில் அதிகபட்சமாக 129 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விழுப்புரத்தில் 76 பேருக்கும் அரியலூரில் 42 பேருக்கும், சென்னையில் 63 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 7 பேருக்கும், தஞ்சாவூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கோயம்பேடு சந்தையை மூட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

